லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தும்போது கூலி உயர்வு கேட்கும் தொழிலாளர்களை அடக்குவது நியாயமா? சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டத்தில் கேள்வி

லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தும்போது கூலி உயர்வு கேட்கும் தொழிலாளர்களை அடக்குவது எந்த வகையில் நியாயம்? என்று சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

Update: 2021-03-09 21:06 GMT
திருச்சி,
லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தும்போது கூலி உயர்வு கேட்கும் தொழிலாளர்களை அடக்குவது எந்த வகையில் நியாயம்? என்று சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

சி‌.ஐ‌.டி‌.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் கலந்துகொண்டு பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
காந்தி மார்க்கெட் லாரி ஷெட் சுமைப்பணி தொழிலாளர்கள் கடந்த 6 மாத காலமாக கூலி உயர்வு கேட்டு வருகிறார்கள். ஆனால் அதனை வியாபாரிகள் ஏற்கவில்லை.

கொரோனாவை காரணம் காட்டி லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆனால் தொழிலாளர்கள் கூலி உயர்த்தப்படவில்லை. கூலியை உயர்த்தாமல் வியாபாரிகள் புதிய அலுவலகம் திறக்க கூடாது, அப்படி திறந்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தொழிலாளர்கள் நியாயம் கேட்க வந்தனர்.

 பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினையை பேசி தீர்க்காமல் புதிதாக அலுவலகம் திறந்தது எந்த வகையில் நியாயம்?. தொழிற்சங்க நிர்வாகிகள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்திருப்பதை போலீசார் திரும்பப்பெறவேண்டும். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இந்த பிரச்சினையை பேசித் தீர்க்க சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சுமைப்பணி தொழிற்சங்க துணைத் தலைவர் ஜெயபால், நிர்வாகிகள் சம்பத், வெற்றி செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்