நீர்சேமிப்பை வலியுறுத்தும் 18-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே நீர்சேமிப்பை வலியுறுத்தும் 18-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் கூலி இன்றி நீர்நிலைகளை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சிவகங்கை,
நீர் சேமிப்பு
நீரின்றி அமையாது உலகு என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் பெருந்தகை நீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து உள்ளார். ஆமாம்! இன்றைய காலக்கட்டத்தில் தண்ணீர் பிரச்சினை தலையானது ஆகும். குடிநீர் பிரச்சினை ஆட்சியே மாற்றி அமைத்து உள்ளது. இத்தகைய தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மழைநீர் சேகரிப்பு அவசியம்.
இதை தான் பண்டைய கால மன்னர்கள் நீர்நிலைகளை பராமரிப்பது குறித்து வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில் ஒரு மன்னர் நீர்நிலைகளை கூலி இன்றி தலைமுறை, தலைமுறையாக பராமரிக்க வேண்டும் என கல்ெவட்டு மூலம் வலியுறுத்தி உள்ளார்.
கல்வெட்டு
சிவகங்கை மாவட்டம் வாடி நன்னியூர் கண்மாய் அருகில் ஒரு கல்வெட்டு இருப்பதாக திருவாடானை நாகணி ஆசிரியர் அர்ச்சுனன், வாடி நன்னியூர் ரெத்தினம் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு அந்த கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார். இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது:-
வாடி நன்னியூர் கண்மாய் அருகில் 2 அடி உயரமும் 1 அடி அகலமும் உள்ள ஒரு கருங்கல்லில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதை அரிவாள் தீட்டுவதற்குப் பயன்படுத்தியதால் மன்னர் பெயர் இருந்த முதல் வரி அழிந்துவிட்டது. தற்போது இக்கல்வெட்டில் 13 வரிகள் மட்டுமே உள்ளன.
கூலி இல்லாமல் பராமரிப்பு வேண்டும்
பிறவரி, ஆளமஞ்சி ஆகியவை தொடர்ந்து தலைமுறை, தலைமுறையாக நடைபெறவேண்டும். இதற்கு யாராவது தீங்கு செய்தால் அவர்கள் கங்கை மற்றும் சேதுக்கரையில் காராம்பசுவையும், பெற்றோரையும் கொன்ற தோஷத்திலே போகக் கடவதாக என்று கல்வெட்டு சொல்லும் செய்தியாகும். இதில் நிலத்துக்கு விதிக்கப்படும் புரவரியை பிறவரி என சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. நீர்நிலைகள் பராமரிப்புக்கு கூலி இல்லாமல் செய்யும் கட்டாய வேலை ஆளமஞ்சி எனப்படுகிறது. இந்த இரண்டும் சந்திரன், சூரியன் உள்ளவரை தொடர்ந்து நடைபெறவேண்டும் என சந்திரப்பிரவேசமாகக் கட்டளையிடப்பட்டுள்ளது. இதில் ஒருசேர இணைத்து என்பதற்கு அன்றில் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக என்ற பொருளில் சந்ததிப் பிரவேசம் என்பதை சந்திரப்பிரவேசம் என குறிப்பிட்டுள்ளனர்.தற்போது இவ்வூர் வாடி நன்னியூர் என அழைக்கப்பட்டாலும் கல்வெட்டில் நன்னியூர் வாடி எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த கல்வெட்டு 18-ம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.