கடலூர் அருகே தாய், மகளை கொன்ற இளநீர் வியாபாரி கைது

கடலூர் அருகே தாய், மகளை கொன்ற இளநீர் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-03-03 20:35 GMT
நெல்லிக்குப்பம், 

புதுச்சேரி நோனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 48). மகள் மாதங்கி என்ற சந்தியா(24). தாய்-மகள் இருவரும் கடந்த 1-ந்தேதி கடலூர் அடுத்த எடையார்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் கொலை செய்யப்பட்டு, பிணமாக கிடந்தனர். 

இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகளை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். 

இளநீர் வியாபாரி

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்ட விஜயலட்சுமியின் உறவினர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது புதுச்சேரி நயினார்மண்டபத்தை சேர்ந்த இளநீர் வியாபாரியான இருசப்பன்(48) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், இருசப்பனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

கைது

விசாரணையில், இருசப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அரியாங்குப்பத்தை சேர்ந்த தனியார் பஸ் மேலாளரின் மனைவியை கொலை செய்து நகையை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜாமீனில் வந்தது தெரியவந்தது. 

அதன்பிறகு இருசப்பன் நோனாங்குப்பத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தங்கி, நயினார்மண்டபம் பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வந்ததும், மாடுகள் மேய்க்க நோனாங்குப்பம் அடுத்த எடையார்பாளையம் தென்னந்தோப்புக்கு தனியாக வரும் விஜயலட்சுமி, அவரது மகள் சந்தியா ஆகியோரை நோட்டமிட்டு, அவர்களை அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்ததோடு, விஜயலட்சுமியின் காதில் இருந்த கம்மலை எடுக்க முடியாததால், காதை வெட்டி கம்மலை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

பாராட்டு

இதையடுத்து இருசப்பனை கைது செய்து, அவரிடம் இருந்து மீட்ட நகைகளை போலீசார் சோதனையிட்டபோது, அவை கவரிங் நகைகள் என்பதும், 2 கிராம் கம்மல் மட்டும் தங்க நகை என்பதும் தெரியவந்தது. கவரிங் நகைகளை தங்க நகை என நினைத்து தாய், மகளை இளநீர் வியாபாரி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையே கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மொபட் மற்றும்  அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. இரட்டை கொலை சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பாராட்டினார். 

மேலும் செய்திகள்