பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்

பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

Update: 2021-03-03 20:18 GMT
பழனி:
பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
மாசித்திருவிழா தேரோட்டம்
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 12-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து 16-ந்தேதி கம்பம் சாட்டுதலும், 23-ந்தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. 
இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான மாசித்திருவிழாவின் தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 9 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி பாதிரிப்பிள்ளையார் கோவிலில் தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
பின்னர் மாலை 3.30 மணி அளவில் அம்மன் தேரேற்றம் நடந்தது. அப்போது அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. 
பக்தர்கள் வெள்ளத்தில்...
இதைத்தொடர்ந்து 4.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி...பராசக்தி... என்று சரண கோஷம் எழுப்பினர்.
பக்தர்கள் வெள்ளத்தில் நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்தது. மாலை 5.45 மணிக்கு தேர் நிலையை வந்து சேர்ந்தது. தேரோட்டத்தையொட்டி பூதங்களை போன்று வேடமணிந்து வந்த பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
இந்தநிகழ்ச்சியில் கோவில் செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் அப்புகுட்டி, சித்தநாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், ராகவன், கந்த விலாஸ் உரிமையாளர்கள் செல்வகுமார், நவீன், நரேஷ், ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்து, சரவண பொய்கை கந்த விலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு மாரியம்மன் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்