பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்
பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்
சிவகங்கை, மார்ச்
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் கலெக்டர் ்மதுசூதன் ரெட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து குறும்படம் மூலம் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த வாகன விழிப்புணர்வு பிரசாரத்தை சிவகங்கை பஸ்நிலையத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற நிலைப்பாட்டை உறுதிசெய்யும் விதமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தவறாமல் வாக்களிப்போம்
அதனடிப்படையில் செய்தித்துறையின் மூலம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அகன்ற மின்னணு திரை கொண்ட வாகனம் மூலம் பொதுமக்கள் அதிகளவு கூடுமிடங்களுக்கு சென்று தேர்தல் நாளன்று கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிப்பது ஜனநாயகத்தின் முதல் கடமை. அன்றைய தினம் தவறாமல் வாக்களிப்போம். மற்றவர்களுக்கும் நினைவூட்டுவோம் என்ற தொகுப்புகளுடன் கூடிய படங்கள் ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துண்டு பிரசுரம்
தொடர்ந்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி அரண்மனைவாசல் பகுதியில் பொதுமக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். பின்னர் சிவகங்கை பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த பஸ்சில் ஏறி அங்கிருந்த பயணிகளிடமும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதையடுத்து சிவகங்கை நகர் அரண்மனைவாசல் பகுதியில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குப்பதிவு மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயக்குமார், நகராட்சி ஆணையர் .அய்யப்பன், வட்டாட்சியர்கள் தர்மலிங்கம், ராஜா ஆகியோர் உடன் சென்றனர்.