ஆம்புலன்களிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்த வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தல்

பட்டுவாடா செய்ய பணம் எடுத்து செல்லப்படுகிறதா என ஆம்புலன்களிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்த வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2021-03-03 18:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினருடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது. 

கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி சாதி, மதம், இனம், வகுப்பு, மொழி, அச்சம், நிறம், பணம் தவிர்த்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கறை நல்லது என்ற லோகோவை வெளியிட்டார். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் பணம் பட்டுவாடா செய்ய எடுத்து செல்லப்படுகிறதா? தேர்தல் நடத்தை விதிமீறல் நடக்கிறதா? என்று வாகன சோதனை நடத்தி வருகின்றனர். 

ஆம்புலன்சுகள், அரசு பஸ்கள், சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்த வேண்டும். ஆம்புலன்சில் நோயாளிகள் இருந்தால் காக்க வைக்காமல் முன்னுரிமை அளித்து உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

ஏதேனும் கட்டிடத்தில் பணம் பதுக்கி வைத்து உள்ளதாக புகார்கள் வந்தால், யாரும் உள்ளே செல்லாமலும், உள்ளே இருப்பவர்கள் வெளியே வராமலும் கண்காணித்து வருமான வரித்துறையினரிடம் தகவல் அளிக்க வேண்டும்.

பரிசு பொருட்கள் தொடர்பாக உள்ளூர் போலீசார் உதவியுடன் ஆய்வு நடத்த வேண்டும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும். 

ஆவணம் இல்லாத பணத்தை பறிமுதல் செய்ய தயங்கக்கூடாது. விழிப்புடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். நீலகிரிக்கு தேர்தல் பார்வையாளர்கள் வந்து அனைத்து பணிகளையும் கண்காணிப்பார்கள்.

 எனவே, தவறு ஏற்படாத வகையில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, சப்-கலெக்டர்கள் மோனிகா, ரஞ்சித் சிங், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

தொடர்ந்து ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்