தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரிஷிவந்தியம்,
பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார சேவை மைய கட்டிடம் உள்ளது. இங்கு தற்போது ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அலுவலகத்தில் அலுவலர்கள் வேலை பார்க்க தேவையான இடவசதி உள்ளதா, கட்டுப்பாடு அறை 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். அப்போது அலுவலகத்தின் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தை உடனடியாக அப்புறப்படுத்த அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
வாக்குச்சாவடி மையம்
இந்த ஆய்வின்போது சங்கராபுரம் தாசில்தார் சையது காதர், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜாமணி, துணை அலுவலர்கள் ராஜராஜன், பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கலெக்டர் கிரண்குராலா சங்கராபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். அப்போது தேர்தலின் போது வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.