வாக்களிப்பது குறித்து செயல்விளக்கம்
தேனி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேனி:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
சட்டமன்ற தொகுதிக்கு 2 இடங்கள் வீதம் நேற்று விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அதன்படி பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு செயல்விளக்கம் நேற்று நடந்தது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்தும், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தின் செயல்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர், பொதுமக்கள் மூலம் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, தேனி தாசில்தார் தேவதாஸ், நகராட்சி ஆணையாளர் நாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.