சட்டமன்ற தேர்தலில் தபால் ஓட்டு பெற 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டு பெற வருகிற 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டு பெற வருகிற 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தபால் ஓட்டு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகர், ரெயில்வே குளிர்சாதன பெட்டி உதவியாளர்கள், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள்,
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், விமான பணியாளர்கள், கப்பல் பணியாளர்கள் ஆகியோர் விருப்பத்தின் அடிப்படையில் தபால் மூலம் வாக்குச்சீட்டு பெற்று வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளது.
16-ந் தேதி வரை
இது தொடர்பாக அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் படிவம் 12டி வினியோகம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே மேற்கண்ட விவரப்படியான வாக்காளர்கள் வருகிற 16-ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) தங்களுக்கு அளிக்கப்படும் படிவம் 12டி-ல் தங்கள் விருப்பத்தை தெரிவித்து விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் படை வீரர்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த பணியில் சேர, உடல் திடகாத்திரம் உள்ள மற்றும் விருப்பம் உள்ள 65 வயதுக்கு உட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் தங்களது முன்னாள் படைவீரர் அடையாள அட்டை மற்றும் படைவிலகல் சான்றுடன் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த பணிக்கு அரசு விதிமுறைகளின் படியான ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.