தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
அனைத்து கட்சி கூட்டம்
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருமான ஜீவரேகா தலைமை தாங்கினார். தாசில்தார்கள் கோபாலகிருஷ்ணன் (ஸ்ரீவைகுண்டம்), செல்வகுமார் (சாத்தான்குளம்), சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை அந்தந்த கட்சியினரால் உடனடியாக அழிக்கப்பட வேண்டும். அவ்வாறு அழிக்காத பட்சத்தில் அதை அழிப்பதற்கான செலவுத்தொகை அந்தந்த கட்சியினரிடமே வசூலிக்கப்படும். தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 1950 என்ற எண் அல்லது 04630-255229 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டும்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணக்கு குழு வேட்பாளர்களின் வரவு-செலவு கணக்குகளை கண்காணிக்கும் என்று அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் சிவகுமார், தேர்தல் துணை தாசில்தார்கள் சிவக்குமார், கோபால், தங்கையா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் காசிராஜன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜகோபால், காங்கிரஸ் நகர செயலாளர் சித்திரை, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பழனி, பா.ஜனதா ஒன்றிய தலைவர் கேசவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ராமலிங்கம், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு பொறுப்பாளர் நடராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தட்டார்மடம்
இதேபோல் தட்டார்மடம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் காந்திநகரில் நடந்தது.
தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் ஜெபதாஸ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலர் பாலகிருஷ்ணன், பா.ஜ.க. சரவணன், தி.மு.க. ஜெகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலர் ஜெயராமன், புரட்சி பாரதம் கட்சி செந்தில்குமார், நாம் தமிழர் கட்சி சகாய விஜயன், அ.ம.மு.க. வேலுமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது. முடிவில், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் நன்றி கூறினார்.
----------