ரெயில்வே போலீசில் புதிதாக 4 மோப்ப நாய்கள் 6 மாத பயிற்சிக்கு பின் பணியில் சேர்ந்தது

போதைப்பொருட்கள், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க ரெயில்வே போலீசில் புதிதாக 4 மோப்ப நாய்கள் வாங்கப்பட்டது. 6 மாத கால பயிற்சிக்கு பிறகு நேற்று முதல் அவை பணியில் சேர்ந்தது.

Update: 2021-03-03 05:32 GMT
சென்னை,

தமிழக ரெயில்வே போலீசில், சென்னை மண்டலத்துக்குட்பட்ட துப்பறியும் மோப்பநாய் பிரிவு சென்னை அயனாவரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த துப்பறியும் மோப்பநாய் பிரிவு ரெயில்வே போலீசில் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த பிரிவு தற்போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 8 போலீசார் மூலம் செயல்பட்டு வருகிறது. முதலில் ரெயில்வே போலீசில் செல்லி மற்றும் டைசன் என்ற 2 மோப்ப நாய்கள் வாங்கப்பட்டது. இந்த 2 மோப்ப நாய்களும், வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்கும் திறன் கொண்டவை.

தேடுதல் வேட்டை

ரெயில் நிலையங்கள், நடைமேடைகள், தண்டவாளங்கள், ரெயில் வண்டிகளில் முக்கிய பாதுகாப்பு நேரங்களிலும், அதேபோல் ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்தாலும், உடனடியாக சம்பந்தப்பட்ட ரெயில் நிலையங்களில் இவை சிறப்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில் மோப்பநாய் செல்லி கடந்த 2010-ம் ஆண்டும், டைசன் 2011-ம் ஆண்டும் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டன. இதையடுத்து ஜாக் மற்றும் ஜெஸ்சி என்ற 2 மோப்ப நாய்கள் புதிதாக வாங்கப்பட்டது. இவைகளும் வெடிகுண்டுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை.

4 மோப்ப நாய்கள்

இந்த 2 நாய்களும், சுமார் 10 வருடங்களாக ரெயில்வே போலீசில் தங்களது பணிகளை சிறப்பாக செய்து வந்தது. இந்தநிலையில் ஜெஸ்சி 2019-ம் ஆண்டும், ஜாக் கடந்த 2020-ம் ஆண்டும் உயிரிழந்தது. இதற்கிடையில் பெர்னி என்ற மோப்ப நாய் கடந்த 2017-ம் ஆண்டு வாங்கப்பட்டு ரெயில்வே போலீசில் தற்போது வரை சிறப்பாக தனது பணியை செய்து வருகிறது.

ஆனாலும், ரெயில்வே போலீசில் பாதுகாப்பு வேலைகளுக்காக துப்பறியும் மோப்ப நாய்கள் அடிக்கடி தேவைப்படுவதால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏஞ்சல், ஆகாஸ் என்ற 2 போதை பொருள் கண்டறியும் மோப்ப நாய்களும், குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கண்டறிய சாரா என்ற மோப்பநாயும், வெடிகுண்டுகளை கண்டறிய சூர்யா என்ற மோப்பநாயும் என 4 நாய்கள் வாங்கப்பட்டது.

6 மாத பயிற்சி

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல், இந்த 4 மோப்ப நாய்களுக்கும், சென்னை மாநகர மோப்பநாய் பிரிவு படையில் பயிற்சியாளர் மூலம், முறையாக 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சி காலம் தற்போது முடிவடைந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு வளாகத்தில் வைத்து ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு முன்னிலையில், எவ்வாறு பயிற்சி பெற்றது என அதன் பயிற்சியாளர்கள் மூலம் ஏஞ்சல், ஆகாஸ், சாரா, சூர்யா ஆகிய 4 நாய்களும் பயிற்சியில் கற்றதை செய்து காண்பித்தன. இதையடுத்து மோப்பநாய்களுக்கு பயிற்சி அளித்தவர்களை சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டினார். 6 மாத பயிற்சிக்கு பிறகு நேற்று முதல் 4 மோப்ப நாய்களும் ரெயில்வே போலீசில் தங்களது பணியை தொடங்கின.

மேலும் செய்திகள்