நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-03-02 23:08 GMT
திருப்பூர்:
நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நூல் விலை உயர்வு 
பின்னலாடை தயாரிப்பில் மிக முக்கியமான பொருளாக நூல் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்தது. அந்த அளவிற்கு நூலின் பயன்பாடு இருந்து வருகிறது. திருப்பூர் தொழில்துறையினர் ஆர்டர்களை பெற்றதும், அதற்கு தேவையான நூலை மொத்தமாக இறக்குமதி செய்து வைத்துக்கொள்வார்கள். இதுபோல் ஆர்டர்கள் பெறும்போதே ஆடைகளுக்கான விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு விடும்.
இதன் பின்னர் ஆடைகள் தயாரித்து சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நூலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நூற்பாலைகள் நூல் விலை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதற்கு மாறாக இந்த மாதம் கிலோவுக்கு மேலும் ரூ.10 நூல் விலை உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசு நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நூல் ஏற்றுமதிக்கு தடை 
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமமைப்பு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:-
நூல் விலையை நூற்பாலைகள் குறைக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுபோல் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதங்களும் பல அனுப்பப்பட்டன. நூற்பாலைகளுக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளோம். ஆனால் நூல் விலையை குறைக்க அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நூல் விலை உயர்வால் ஆர்டர்களை பெற முடியவில்லை.
ஏற்கனவே பெற்ற ஆர்டர்களையும் அனுப்ப முடியவில்லை. இவ்வாறு ஆடை தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகிறோம். பலரும் நஷ்டம் அடைந்து வந்து கொண்டிருக்கிறோம். எனவே மத்திய அரசு நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்