வேலூர் ஜெயிலுக்குள் கஞ்சா வீச முயன்ற வாலிபர் கைது
வேலூர் ஜெயிலுக்குள் கஞ்சா வீச முயன்ற வாலிபர் கைது
வேலூர்
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயில் வளாகத்தையொட்டி விவசாய நிலம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு அத்துமீறி நுழைந்த வாலிபர் தென்னை மரத்தில் ஏறி ஜெயில் வளாகத்தை எட்டிப்பார்த்தார். ஜெயில் கண்காணிப்பு கோபுரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக்காவலர்கள் இதைக்கண்டு அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். சிறைக்காவலர்களை கண்டதும் வாலிபர் தென்னை மரத்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டி சென்று சிறைக்காவலர்கள் மடக்கி பிடித்தனர்.
அவரை சோதனையிட்டதில் 45 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில், வேலூர் கன்சால்பேட்டை இந்திராநகரை சேர்ந்த தசரதன் மகன் சிவசக்தி (வயது 26) என்பதும், தென்னை மரத்தில் ஏறி ஜெயிலுக்குள் கஞ்சாபொட்டலம் வீச முயன்றதும் தெரிய வந்தது. அதையடுத்து கஞ்சா பொட்டலத்தை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த வாலிபரை பாகாயம் போலீசில் ஒப்படைத்து, புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிவசக்தியை கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலுக்குள் கஞ்சா வீச முயன்ற வாலிபர் அதே ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டார்.