வேலூரில் இரும்புக்கடை உரிமையாளர் கொண்டு சென்ற ரூ.3½ லட்சம் பறிமுதல்
வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி இரும்புக்கடை உரிமையாளர் காரில் கொண்டு சென்ற ரூ.3½ லட்சத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர்,
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 3 பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் என்று மொத்தம் 15 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.
பறக்கும்படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் முக்கிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் கணேசன் தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் 12 மணியளவில் வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில், ரூ.3½ லட்சம் இருந்தது.
இதுகுறித்து நிலை கண்காணிப்புக்குழுவினர் விசாரித்தனர். அப்போது காரை ஓட்டி வந்தவர் வேலூர் சத்துவாச்சாரி பேங்க் மேன் நகரை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பதும், வேலூரில் இரும்புகடை வைத்திருப்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர் சத்துவாச்சாரியில் உள்ள வங்கியில் ரூ.3½ லட்சத்தை செலுத்துவதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர், வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வேலூர் உதவி கலெக்டருமான கணேசிடம் ஒப்படைத்தனர். அப்போது வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.