அரசு பெண் அலுவலருக்கு மிரட்டல்: சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் கைது

அரசு பெண் அலுவலரை மிரட்டியதாக சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-02 22:18 GMT
சேலம்:
அரசு பெண் அலுவலரை மிரட்டியதாக சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
ரியல் எஸ்டேட் அதிபர்
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 49). இவர் வின்ஸ்டார் இந்தியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் அதிபரான இவர், ஈமுகோழி வளர்ப்பு உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வந்தார்.
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் பல்வேறு மோசடிகள் செய்ததாக அவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பலர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்த நிலையில் அவர் நடத்தி வந்த நெல்லிச்சாறு தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா ஆய்வு நடத்தினார். அதில் நெல்லிச்சாறில் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கண்டுபிடிக்க முடியவில்லை
இதையொட்டி நடந்த விசாரணையின் போது சிவக்குமார் தன்னை மிரட்டியதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா சேலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அரசு பெண் அதிகாரியை மிரட்டியதாக சிவக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் அவர் தலைமறைவானார். அவரை பல இடங்களில் போலீசார் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து டவுன் போலீசார் சேலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து தலைமறைவான சிவக்குமாரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தது. 
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சிவக்குமாரை கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்