மினி பஸ் சிறைபிடிப்பு
சுரண்டை அருகே பொதுமக்கள் மினி பஸ்சை சிறைபிடித்தனர்.
சுரண்டை, மார்ச்:
சுரண்டையில் இருந்து பரங்குன்றாபுரம், மரியதாய்புரம், லட்சுமிபுரம் வழியாக கீழக்கலங்கல் கிராமத்திற்கு ஒரு தனியார் மினி பஸ் சென்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 8 மணிக்கு சுரண்டையில் இருந்து பெண் பயணி ஒருவர் மரியதாய்புரம் செல்வதற்காக பஸ் ஏறியுள்ளார். மரியதாய்புரம் விலக்கு வந்தபோது, வேறு பயணிகள் இல்லை என்ற காரணத்தை கூறி, ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்குள் செல்லாது என பஸ் ஊழியர்கள் கூறியுள்ளனர். அத்துடன் அந்தப் பெண்ணை மரியதாய்புரம் விலக்கில் இறக்கி விட்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் இரவு நேரத்தில் ஊருக்கு நடந்து சென்ற அந்தப் பெண் கிராமத்தில் உள்ள பெரியவர்களிடம் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த கிராமத்தினர் மறுநாள் காலையில் இந்த மினி பஸ் கிராமத்திற்குள் வந்தபோது அதனை சிறைபிடித்தனர். பஸ்சில் இருந்த பிற ஊர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகளை தனித்தனியாக ஆட்டோவில் ஏற்றி கிராமத்தினரின் செலவிலேயே அனுப்பி வைத்தனர். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பார்த்து கொள்வதாக பஸ் உரிமையாளர் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அந்த மினி பஸ்சை விடுவித்தனர்.