புரோட்டாவை பிடுங்கி சாப்பிட்டதில் தகராறு வாலிபர் அடித்து கொலை

கோவை அருகே புரோட்டாவை பிடுங்கி சாப்பிட்டதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செங்கல் சூளை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-02 21:07 GMT
கைதான வெள்ளியங்கிரி
துடியலூர்,

கோவையை அடுத்த இடையர்பாளையம் சிவாஜி காலனி சிவகாமி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 25). குடிப்பழக்கம் உள்ள இவருக்கு தடாகத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வரும் 2 பேர் நண்பர்களானார்கள். 

இதையடுத்து அவர் தனது நண்பர்களை பார்ப்பதற்காக செங்கல் சூளைக்கு சென்றார். பின்னர் ஜெயக்குமார் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது அந்த செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வரும் வெள்ளியங்கிரி (35) என்பவர் புரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். 

அந்த புரோட்டாவை பார்த்ததும் ஜெயக்குமாருக்கு அதை சாப்பிட ஆசை ஏற்பட்டது. உடனே அங்கு சென்ற அவர் வெள்ளியங்கிரியிடம் எதுவும் கேட்காமலேயே, அவரிடமிருந்து புரோட்டாவை பிடுங்கி சாப்பிட்டார். 

இதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளியங்கிரி, ஏன் புரோட்டாவை  
பிடுங்கி சாப்பிட்டாய் என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வெள்ளியங்கிரி மனைவி பற்றி ஜெயக்குமார் தவறாக பேசியதாக தெரிகிறது. 

இதையடுத்து அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்த ஜெயக்குமார், வெள்ளியங்கிரி மீது தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர், அங்கு கிடந்த கட்டையை எடுத்து ஜெயக்குமார் தலையில் ஓங்கி அடித்தார். 

இதில் சுருண்டு விழுந்த அவரை மீண்டும் தலை மற்றும் முகத்தில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த  ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த தடாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதுடன், ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளியங்கிரியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்