திருச்சி விமான நிலையத்தில் ரூ.39 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் ஆந்திர பெண்ணிடம் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் ரூ.39 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆந்திர பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செம்பட்டு,
துபாயில் இருந்து நேற்று காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த 25 வயது பெண், துபாயில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும் போது, தனது உள்ளாடையில் பசை வடிவில் ரூ.39 லட்சம் மதிப்பிலான 845 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.