திருச்சியில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த புத்தகப்பைகள் பறிமுதல்
திருச்சியில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த புத்தகப்பைகள் பறிமுதல் தி.மு.க. புகாரின்பேரில் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சி,
திருச்சியில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த புத்தகப் பைகளை தி.மு.க. புகாரின் அடிப்படையில் பறிமுதல் செய்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
வாகனத்தில் பைகள்
திருச்சி உறையூர் குறத்தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஒரு அறையில் இருந்து நேற்று காலை சரக்கு ஆட்டோ மற்றும் வாகனங்களில் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படம் பொறிக்கப்பட்ட புத்தகப் பைகள், ஜியாமெட்ரி பாக்ஸ் மற்றும் கலர் பென்சில்கள் மூட்டை, மூட்டையாக ஏற்றப்பட்டன. அப்போது திருச்சி மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் முத்து செல்வம், தில்லைநகர் பகுதி செயலாளர் கண்ணன் மற்றும் தி.மு.க.வினர் அங்கு வந்து அதனை தடுத்து நிறுத்தினார்கள்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் தற்போதைய முதல்-அமைச்சர் படத்துடன் கூடிய இந்த பைகளை வெளியில் எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது எனக்கூறி தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பள்ளி ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குச்சாவடிக்கு இடையூறு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிராஜ் தலைமையில் போலீசார் அங்கு வந்து குவிந்தனர். மேலும் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பாளர் ஜோசப் அந்தோணி, திருச்சி மேற்கு தாசில்தார் ரமேஷ் ஆகியோரும் அங்கு வந்தனர்.
அப்போது பள்ளி தரப்பில், இந்த நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியாக மாற்றப்படுகிறது. வாக்குச்சாவடி அமைப்பதற்கு இந்த பைகள் மற்றும் பொருட்கள் இடையூறாக இருந்ததால் அவற்றை நகரின் மற்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பி வருகிறோம். மற்றபடி மாணவர்களுக்கு இப்போது வழங்குவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்கள். ஆனால் தி.மு.க.வினர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
வீடு வீடாக வழங்க திட்டம்
பள்ளிகளிலிருந்து இந்த புத்தக பைகள் மாணவர்களுக்கு வழங்குகிறோம் என்ற பெயரில் வீடு வீடாக வழங்கி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே இவற்றை பறிமுதல் செய்யவேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து மேலும் பிரச்சினை ஏற்படாமலிருக்க பறக்கும்படை அதிகாரிகள் அந்த பள்ளியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பைகளை மீண்டும் அங்கேயே கொண்டுவருவதற்கு ஏற்பாடு செய்தனர்.
மேலும் இதனை வேறு எங்கும் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம். ஒரு அறையில் அவற்றை அடைத்து சீல் வைக்க ஏற்பாடு செய்கிறோம் எனக் கூறினார்கள். பின்னர் அந்த பைகள் அங்கேயே வைத்து சீல் வைக்கப்பட்டது.
பூட்டி சீல்வைப்பு
அதேபோல் புத்தூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த ஜியாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களும் தனித்தனி அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மாணவர்களுக்கு பைகள், மற்றும் பொருட்கள் வழங்க இருந்த பள்ளி ஆசிரியர்கள், இதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாநகர தி.மு.க. செயலாளர் அன்பழகன் உறையூர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் நேற்று நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.