கியாஸ் சிலிண்டர் குடோனை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கிராம மக்கள் நூதன போராட்டம்

கியாஸ் சிலிண்டர் குடோனை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கிராம மக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2021-03-02 19:49 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கரடிகுளம் கிராமத்தில் கியாஸ் சிலிண்டர்கள் இருப்பு குடோன், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. அந்த குடோன் அருகில் அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், வழிபாட்டு தலங்கள், சுடுகாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. திருவிழா காலங்களில் இந்த குடோன் அருகில்தான் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். ஆனால் அங்கு அந்த குடோன் இருப்பதன் காரணமாக தற்போது பொதுமக்கள் எந்த திருவிழாவையும் பட்டாசு வெடித்து கொண்டாடுவதில்லை.
இந்நிலையில் அந்த குடோன் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ? என்று கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். அந்த கியாஸ் குடோனை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் திரண்டு, குடோனுக்கு செல்லும் பாதையை மறித்து அதில் மரக்கன்றுகளை நட்டு, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த குடோனை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி இந்த போராட்டம் நடந்தது. இதன் காரணமாக குடோனுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்