வீட்டில் பீரோவை உடைத்து 20 பவுன் நகை- பணம் திருட்டு
தா.பழூரில் வீட்டில் பீரோவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்கள், சொத்து பத்திரங்கள், பட்டுப்புடவைகளை தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
தா.பழூர்:
நகை- பணம் திருட்டு
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த தாதம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் பொன்னம்பலம்(வயது 70). இவர் நேற்று மாலை 6 மணி அளவில் சிலால் கிராமத்தில் உள்ள கோவில் விசேஷத்திற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அவர் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே செல்ல முயன்றபோது உள்பக்கமாக கதவு தாழிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொன்னம்பலம் வீட்டின் பின்புறமாக சென்று பார்த்தபோது பின் கதவு திறக்கப்பட்டிருந்தது.
மேலும் வீட்டுக்குள் புகை மண்டலமாக இருந்தது. உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரது படுக்கை அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 20 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தன. மேலும் பீரோவில் இருந்த பல்வேறு சொத்து பத்திரங்கள், பட்டுப்புடவைகள் ஆகியவற்றை தீ வைத்து கொளுத்தி விட்டு மர்ம நபர்கள் நகை- பணத்துடன் தப்பிச்சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதையடுத்து அக்கம் பக்கத்தினரை அவர் உதவிக்கு அழைத்து, படுக்கை அறையில் மேலும் தீ பரவாமல் தண்ணீர் ஊற்றி அணைத்தார். இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டதுடன், சொத்து பத்திரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.