பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

செல்போன் காணாமல் போனதால் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-02 19:49 GMT
கீழப்பழுவூர்:

பிளஸ்-1 மாணவர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பியக்குடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமாரின் மகன் நிஷாந்த்(வயது 15). இவர் இலந்தைகூடம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்ட நிஷாந்த், செல்போனை எடுத்து சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல், அதன் அருகே உள்ள பகுதியில் நண்பர்களுடன் விளையாடியுள்ளார். மேலும் அவருடைய செல்போனை, இலந்தைக்கூடம் கிராமத்தில் உள்ள அவருடைய நண்பர் ஒருவரது வீட்டில் சார்ஜ் போட்டுள்ளார். பின்னர் மாலையில் அவர் அங்கு சென்று பார்த்தபோது செல்போனை காணவில்லை.
தற்கொலை
இதனால் அதிர்ச்சியடைந்த நிஷாந்த், வீட்டில் தனது பெற்றோர் செல்போன் பற்றி கேட்டால் என்ன சொல்வது என்ற அச்சத்துடனேயே வீட்டிற்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்றிருந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு திரும்பாததால், நிஷாந்த் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் தூக்குப்போட்டு தொங்கியதாக தெரிகிறது.
சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் நிஷாந்த் தூக்கில் தொங்கியதை கண்டு, அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நிஷாந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இச்சம்பவம் குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் காணாமல் போனதால், மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்