திண்டுக்கல்லில் துணை ராணுவ வீரர்கள் கொடி அணி வகுப்பு

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள துணை ராணுவ வீரர்கள் திண்டுக்கல்லில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Update: 2021-03-02 19:37 GMT
திண்டுக்கல்:
சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள துணை ராணுவ வீரர்கள் திண்டுக்கல்லில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தேர்தல் பாதுகாப்பு பணி 
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக வடமாநிலங்களில் இருந்து துணை ராணுவ வீரர்கள் தமிழகத்துக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பழனி, திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
எனவே, சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது 7 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நாளில் பாதுகாப்பு, வாக்கு எண்ணும் மையத்தில் சுமார் ஒரு மாதம் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டியது இருக்கிறது. இதற்கு சுமார் 2 ஆயிரத்து 300 போலீசார் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படுகின்றனர்.
துணை ராணுவம் 
ஆனால், மாவட்டம் முழுவதும் 1,850 போலீசார் பணியாற்றி வருகின்றனர். எனவே, கூடுதலாக 450 போலீசார் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படுகின்றனர். எனவே, வடமாநிலத்தில் இருந்து 4 கம்பெனிகளை சேர்ந்த 460 துணை ராணுவ வீரர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் முதல்கட்டமாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு கம்பெனி துணை ராணுவ வீரர்கள் 90 பேர் திண்டுக்கல்லுக்கு நேற்று முன்தினம் வந்தனர்.
இதையடுத்து நேற்று திண்டுக்கல்லில் துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு தொடங்கியது. இதில் துணை ராணுவ வீரர்களுடன், ஏராளமான போலீசாரும் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பு ஊர்வலம் ஏ.எம்.சி.சாலை, மெயின்ரோடு, மணிக்கூண்டு, . கிழக்கு ரதவீதி, மேட்டுப்பட்டி, பேகம்பூர், பாறைபட்டி, ஆர்.வி.நகர் வழியாக தெற்கு போலீஸ் நிலையத்தில் நிறைவுபெற்றது. இதேபோல் அனைத்து தொகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்