ஆலோசனை கூட்டம்

சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி வங்கியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2021-03-02 18:00 GMT
சிவகங்கை
நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி வங்கியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது.:-
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து செயல்படும் வகையில் வங்கிகள் மூலம் வாடிக்கையாளர் கணக்கிலிருந்து திடீர் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுதல் மற்றும் பணப்பரிமாற்றம் போன்ற செயலை கண்காணிக்கும் வண்ணம் தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் வங்கிகளில் ஒரு சிலர் வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்கி பலமாதங்களுக்கு பின்பு திடீரென அந்தக்கணக்கில் அதிகளவில் பணப்பரிவர்த்தனை செய்தால் அது குறித்து கண்காணிக்க வேண்டும். அதேபோல் பணப்பரிவர்த்தனை இல்லாத கணக்கிலிருந்து திடீரென ரூ.1 லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை நடந்தாலும் கண்காணிக்க வேண்டும். மேலும், ஒரு கணக்கிலிருந்து பல்வேறு நபர்களுக்கு குறைந்த தொகை பணப்பரிமாற்றம் நடைபெற்றால் அது குறித்தும் கண்காணிக்க வேண்டும்.
 ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு அதிக அளவிலான தொகை வரவு வந்தாலும் அது குறித்தும் கண்காணிக்க வேண்டும். அதேபோல் ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் போதும் மற்றும் ஏ.டி.எம்.மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் போது சரியான முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டுசெல்ல வேண்டும். செல்பவர் மற்றும் வாகனம் குறித்த முழு விவரம் அதில் பதிவு செய்ததுடன் கொண்டு செல்லும் பணத்திற்கான விவரத்தையும் சரியாக பூர்த்தி செய்து தலைமை அலுவலரின் கையொப்பம் இட்டு எடுத்து செல்ல வேண்டும். செல்லும் வழியில் தேர்தல் பணியாற்றும் குழு ஆய்வு செய்தால் ஆவணங்களை காண்பித்து செல்ல வேண்டும்.
 இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார்,, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது).ரெத்தினவேல் மற்றும் வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர

மேலும் செய்திகள்