திருமண மண்டபங்களில் கூட்டமாக தங்க அனுமதிக்கக்கூடாது
திருமண மண்டபவங்களில் வெளிநபர்கள் கூட்டமாக தங்குவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று அதன் உரிமையாளர்களுக்கு கலெக்டர் கிரண்குராலா உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டபம் மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிரண்குராலா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தேர்தல் ஆணையம் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திடவும், தேர்தல் பிரசாரத்தின்போது சமமான ஆரோக்கியமான போட்டியிடும் சூழலை அனைத்து வேட்பாளர்களிடையே உருவாக்கிட பல்வேறு அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அச்சகங்களின் உரிமையாளர்கள் தங்களது அச்சகங்களில் அடிக்கப்படும் தேர்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், டிஜிட்டல் பேனர் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் போது, அச்சிடுபவர் மற்றும் வெளியிடுபவர் பெயர் மற்றும் முகவரி முகப்பு பக்கத்தில் அச்சிட வேண்டும். திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதிகளில் வெளியூர் நபர்கள் கூட்டமாக தங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது.
பரிசு பொருட்கள்
மேலும் அங்கு தங்க அனுமதி கோரும் நபரிடம் ஆதார் அட்டை அல்லது புகைப்பட அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டைகளை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். சுப நிகழச்சிகளை தவிர அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டால் அது குறித்த விவரத்தை தேர்தல் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
.சுப நிகழ்ச்சிகள் என்கிற பெயரில் மக்களை கூட்டி பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவைகளை வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆயுதங்கள், பட்டாசுகளை வைக்க அனுமதிக்கக் கூடாது. .நகை அடகுக்கடை உரிமையாளர்கள் பொதுக்கூட்டம் மற்றும் விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளின் போது வாக்காளர்களுக்கு மறைமுகமாக அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு டோக்கன் உள்ளிட்டவற்றை கையாள்வதை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
நடவடிக்கை
.அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை வேட்பாளர்கள் அல்லது அவரது முகவர்கள் மொத்தமாக திருப்பி வாக்காளர்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும். இதைமீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தேர்தல் தனி தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், நகை அடகுக்கடை உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.