ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பொங்கலூரில் விவசாயிகள் உண்ணாவிரதம்

ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட விவசாயிகளின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் பொங்கலூரில் நடைபெற்றது.

Update: 2021-03-02 17:11 GMT
பொங்கலூர்
ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட விவசாயிகளின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் பொங்கலூரில் நடைபெற்றது.
ஆனைமலையாறு-நல்லாறு திட்டம்


கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் 4 லட்சம் ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. ஆரம்பகாலங்களில் தொடர் நீர்பாசனமாக நடைபெற்ற பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் நாளடைவில் பாசன பரப்பு அதிகரிப்பின் காரணமாக முறை வைத்து பாசனம் நடைபெற்று வருகிறது. தற்போது பாசனம் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
நாளுக்கு நாள் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் தங்களது சாகுபடியை முழுமையாக செய்ய  முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே காமராஜர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். 

உண்ணாவிரதம்

இந்த நிலையில் ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகள் சார்பில் பொங்கலூர் வலசுப்பாளையம் பிரிவு அருகே உண்ணாவிரதம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் பொங்கலூர் வட்டார பகிர்மான குழு தலைவர் டி.கோபால் தலைமை தாங்கினார். பகிர்மான குழு தலைவர்கள் பல்லடம் சாமியப்பன், காங்கேயம் வரதராஜ், வடசித்தூர் நல்லதம்பி, பூலாங்கிணறு ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குண்டடம் பகிர்மான குழு தலைவர் ஈஸ்வரன் வரவேற்று பேசினார். 
உண்ணாவிரதத்தை திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், கூட்டமைப்பு தலைவர் ராஜகோபால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் பேசினார். உண்ணாவிரதத்தின் போது பகிர்மான குழுத்தலைவர் கோபால் பேசியதாவது:-

திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

 காமராஜர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் ஆரம்பகாலங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு 135 நாள் தொடர்ந்து நீர் பாசனம் பெற்று வந்தது. அதன் பிறகு பாசன பரப்பு நான்கு லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் நீர் மேலாண்மைக்கான எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை. இருக்கிற நீரை பகிர்ந்து அளிக்க கூடிய ஒரு நிலையே உருவானது. இதனால்  இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்டலத்திற்கு நீர் பாசனம் பெறுகிற வகையில் நிலைமை மோசமாக உள்ளது. அதுவும் முறை வைத்து நீர்ப்பாசனம் பெற்று வருவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் மிகவும் குறைந்து போய் விட்டது. இதனால் முழுமையாக சாகுபடியை எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
  எனவேதான் ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். 
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு கேட்டு வரும் உறுப்பினர்களிடம் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்கள் கட்டுபடியாகாத நிலையே இருந்து வருகிறது. இதனை அரசு கவனத்தில் கொண்டு மூன்று விதமாக விவசாய விளைபொருட்களை வகைப்படுத்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதில் அழுகும் பொருட்களான தக்காளி, வெங்காயம் ஆகியவற்றுக்கு உற்பத்தி விலையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அடுத்து சேமித்து வைத்து விற்பனை செய்யக்கூடிய கம்பு, சோளம், மக்காச்சோளம் உட்பட பல்வேறு பொருட்களுக்கு ஒரு விலை நிர்ணயமும், நீண்டகால சேமிப்பு மற்றும் பயிர்களான தென்னை, மஞ்சள், கரும்பு ஆகியவற்றுக்கு ஒரு விலையும் நிர்ணயம் செய்து அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 
நிறைவாக உடுமலை பகிர்மான குழு தலைவர் அருண் நன்றி கூறினார். இந்த உண்ணாவிரத  போராட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்