முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு 4 ஆண்டு சிறை

லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-03-02 14:17 GMT
விழுப்புரம், 

செஞ்சி தாலுகா தேவதானம்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் மனைவி சுதா (வயது 34). இவருக்கு மத்திய அரசின் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பேரில் இவர் கடந்த 2014-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளார். இதற்குரிய தொகையான ரூ.59,541-ஐ காசோலையாக தரும்படி அப்போதைய தேவதானம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த ஆறுமுகம் (45) என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் வீடு கட்டிய தொகைக்கான காசோலையை வழங்க வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதுகுறித்து சுதா, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கூறிய அறிவுரைப்படி கடந்த 21.8.2014 அன்று ரசாயன பொடி தடவிய லஞ்ச பணத்தை சுதா எடுத்துக்கொண்டு ஆறுமுகத்திடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது ஆறுமுகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

4 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்திற்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்