மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்பாடுகள் குறித்து கிருஷ்ணகிரியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-03-02 06:41 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக 6 தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

விழிப்புணர்வு பயன்பாடு

இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டார். தொடர்ந்து தேர்தல் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பயன்பாட்டிற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 20 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்கப்பட்டன.
இதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்து கலெக்டர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மின்னணு வாக்குப்பதிவு எந்திர சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்