குடிநீர் வழங்கக்கோரி வேலூர் மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் வழங்கக்கோரி வேலூர் மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.
வேலூர்
வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாறை மாரியம்மன் கோவில் தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தத் தெருவில் உள்ள குடிநீர் குழாயில் கடந்த 25 நாட்களாக சரிவர தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் மாநகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி நேற்று வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள 4-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த அலுவலர்கள், குடிநீர் வழங்க உடனடியாக ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.