திருப்போரூரில் சுவர் விளம்பரம், பேனர்கள் அகற்றம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந் ததையொட்டி, திருப்போரூர் தொகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள், சுவர் விளம்பரம், பேனர்களை அகற்றினர்.
திருப்போரூர்,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலராக கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் மண்டல தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், வட்டாட்சியர், கூடுதல் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வாக்குச்சாவடி மையங்களில் மின்விளக்கு, குடிநீர், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் உள்ளிட்ட வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளனவா? என தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து நாளை(புதன்கிழமை)க்குள் அதனை சரி செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலானதையொட்டி நேற்று மாலை திருப்போரூர் தி.மு.க., எம்.எல்.ஏ. அலுவலகத்தை திருப்போரூர் தாசில்தார் ரஞ்சனி பூட்டி சீல் வைத்தார்.
அப்போது, துணை வட்டாட்சியர்கள் ஜீவிதா, சத்யா, திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் புஷ்ப ராணி ஆகியோர் உடன் இருந்தனர்.
அதேபோல் திருப்போரூர் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் உதவியுடன், திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகள், சாதி அமைப்புகளின் சுவரொட்டிகள், பேனர்கள் அகற்றப்பட்டன. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.
திருப்போரூர் தொகுதியில் இதுவரை 307 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது கூடுதலாக 110 வாக்குச்சாவடி மையங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது.