நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்வு ஆடை தயாரிப்பாளர்கள் கவலை
நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆடை தயாரிப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
திருப்பூர்:
நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆடை தயாரிப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
நூல் விலை உயர்வு
பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். நூலின் பங்கு ஆடை தயாரிப்பில் இன்றியமையாததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நூல் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் ஆடை தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
திருப்பூரில் உள்ள அனைத்து பின்னலாடை சங்கங்களும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே நேற்று நூல் விலை மேலும் கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.
ஆடை தயாரிப்பாளர்கள் கவலை
இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது:
வழக்கத்தை விட சீசன் தொடங்குவதற்கு முன்பே பஞ்சு விலை இந்தியாவில் உயர்ந்து காணப்படுகிறது. பஞ்சு விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்து காணப்படுகிறது. பஞ்சு விலை உயர்வால் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. இதனால் நூல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் தமிழக நூற்பாலைகளுக்கு ஏற்பட்டுள்ளது என நூற்பாலைகள் தெரிவித்து வருகின்றன.
இருப்பினும் விலையை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது மேலும் கிலோவுக்கு ரூ.10 உயர்ந்திருப்பது கவலையளிக்கிறது. அதன்படி கோம்டு (வரி உள்பட) 20-வது நம்பர் ஒரு கிலோ ரூ.243-க்கும், 25-வது நம்பர் ரூ.252-க்கும், 30-வது நம்பர் ரூ.264-க்கும், 34-வது நம்பர் ரூ.278-க்கும், 40-வது நம்பர் ரூ.289-க்கும், செமி கோம்டு 20-வது நம்பர் ரூ.232-க்கும், 25-வது நம்பர் ரூ.241-க்கும், 30-வது நம்பர் ரூ.253-க்கும், 40-வது நம்பர் ரூ.278-க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.