அரசியல் கட்சியினர் அன்னதானம் வழங்கக்கூடாது தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அச்சக உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் அன்னதானம் வழங்கக்கூடாது என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

Update: 2021-03-01 22:02 GMT
திருப்பூர்:
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அச்சக உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் அன்னதானம் வழங்கக்கூடாது என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
திருமண மண்டப உரிமையாளர்கள்
திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் திருமண மண்டபங்களில் தனிநபர்களால் திருமண நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் முடியும் வரை முன்பதிவு செய்யப்பட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தாசில்தார்கள் மற்றும் காவல்துறையினருக்கு எழுத்து பூர்வமாக திருமண மண்டப உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட திருமண அழைப்பிதழ் நகல்களுடன் உடனடியாக அளிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினரால் வாக்காளர்களுக்கு விருந்தளித்தல், பரிசு பொருட்கள் வழங்குதல் போன்ற நிகழ்சிகளை நடத்த அனுமதி வழங்கக்கூடாது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது தெரியவந்தால் உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருமண மண்டபங்களில் அன்னதானம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் அனுமதிக்கக்கூடாது. திருமண நிகழ்ச்சிகளின்போது அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றுடன் கூடிய விளம்பர பேனர்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை திருமண மண்டபங்களில் வைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு இருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அச்சக உரிமையாளர்கள்
அச்சக உரிமையாளர்கள் தாங்கள் அச்சிடும் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், விளம்பரங்கள் மற்றும் இதர இனங்களில் தங்களது அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி விளம்பரம் வெளியிடுவோரின் பெயர் மற்றும் முகவரி, வெளியிடப்படும் விளம்பரத்தின் பிரதிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை தவறாமல் அச்சிட வேண்டும். அச்சடிக்கப்படும் துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவற்றின் 10 நகல்களை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் உறுதிமொழியுடன் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அச்சிடப்பட்ட 3 நாட்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
அதுபோல் அச்சகத்தில் அடிக்கப்படும் நோட்டீசுகளில் ஒரு பிரதி மற்றும் எண்ணிக்கை விவரத்தை பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட ரசீதுகளின் பிரதியை பராமரிக்க வேண்டும். அச்சிடப்படுபவற்றின் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் அனுமதி பெற்று அல்லது அவருடைய கவனத்துக்கு கொண்டு சென்று பின்னர் அச்சிட வேண்டும். சாதி, மொழி, இன அடிப்படையில் விமர்சிக்கும் வாசகங்கள் இடம்பெறக்கூடாது. தனிநபர்களை இழிவுபடுத்தக்கூடிய அல்லது விமர்சனம் செய்யக்கூடிய பிரசுரங்களை அச்சிடக்கூடாது. மேற்கண்ட நடைமுறைகளை மீறுபவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்