சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

திருமணம் செய்ய போலீஸ்காரர் மறுத்ததால் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-03-01 21:51 GMT
சேலம்:
திருமணம் செய்ய போலீஸ்காரர் மறுத்ததால் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணம் செய்ய மறுப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவூர் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி சசி (வயது 28). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனிடையே, கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், சசியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ்காரரின் குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனை அறிந்த சசி, என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்ன நியாயம்? என்று அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் போலீஸ்காரர், தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. போலீஸ்காரருக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயற்சி
இந்தநிலையில் நேற்று காலை சசி தனக்கு நியாயம் வழங்க கோரியும், போலீஸ்காரருடன் திருமணம் செய்து வைக்க கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அவரை போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி நின்ற சசி, திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த போலீசார் ஓடிச்சென்று அவரை தடுத்து நிறுத்தி தலையில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அப்போது அவர் கண்ணீர் மல்க போலீசாரிடம் கூறும்போது, என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய போலீஸ்காரர் தற்போது ஏமாற்றிவிட்டார். வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அதை தடுத்து நிறுத்தி அவருடன் என்னை சேர்த்து வையுங்கள், என்றார்.
அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக சசியிடம் கூறி அவரை சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். போலீஸ்காரர் திருமணம் செய்ய மறுப்பதாககூறி பெண் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்