சேலம் மாவட்டத்தில் முதல் நாளில் 987 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் நேற்று முதல் நாளில் 497 முதியவர்கள் உள்பட 987 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முதல் நாளில் 497 முதியவர்கள் உள்பட 987 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள 55 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள், போலீசார் என 21 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டது. 6 ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தடுப்பூசி 2-ம் டோஸ் போடப்பட்டுள்ளது.
987 பேருக்கு தடுப்பூசி
இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த பணிகளை சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, மாவட்டத்தில் இன்று (நேற்று) முதல் நாளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 497 பேர், 45 வயதுக்கு மேல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 490 பேர் என மொத்தம் 987 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றனர்.