இலஞ்சியில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்ற ராகுல்காந்தி
இலஞ்சியில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் ராகுல்காந்தி புறப்பட்டுச் சென்றார்.
தென்காசி, மார்ச்:
ராகுல் காந்தி நேற்று முன்தினம் தென்காசியில் தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரம் முடிந்து இரவில் பழைய குற்றாலத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார். காலையில் அவர் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி ஆர்.பி.மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டிருந்தது. ராகுல் காந்தி நேற்று காலை 9.15 மணிக்கு அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து இலஞ்சி பள்ளிக்கு காரில் சென்றார். அங்கு 9.30 மணிக்கு தயாராக இருந்த ஹெலிகாப்டரில் ஏறி கன்னியாகுமரி சென்றார். ராகுல் காந்தி விடுதியிலிருந்து இலஞ்சி பள்ளி செல்லும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 2 மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
குற்றாலம், செங்கோட்டை, மின் நகர் போன்ற பகுதிகளிலிருந்து இலஞ்சிக்கு வரும் சாலை அனைத்தும் மூடப்பட்டு அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த வழியாக வந்த பொதுமக்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. எனவே சுமார் 2 மணி நேரம் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாயினர்.