சட்டமன்ற தேர்தலுக்காக வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்யக்கூடாது
சட்டமன்ற தேர்தலையொட்டி வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்யக்கூடாது என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர்:
சட்டமன்ற தேர்தலையொட்டி வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்யக்கூடாது என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
வழிபாட்டு தலங்கள்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றுவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை தாங்கிய மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:-
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் வெவ்வேறு சாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கு இடையே வெறுப்பை தூண்டுகிற அல்லது அதிகப்படுத்துகிற செயலில் ஈடுபடக்கூடாது. கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மற்ற கட்சியின் தலைவர்கள், தொண்டர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, பொது நடவடிக்கைகளுக்கு தொடர்பில்லாத விவரங்களை பற்றியோ விமர்சிக்கக்கூடாது. சாதி, மத உணர்வுகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பதை தவிர்க்க வேண்டும். மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள், கோவில்கள் மற்றும் மற்ற வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.
கொரோனா நோய் தொற்று காலம்
கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும். பொது பிரசாரம் செய்யும்போது முககவசம் அணிய வேண்டும். பொதுக்கூட்டத்தில் சமூக இடைவெளி மற்றும் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது 3 வாகனங்களில் வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
தனியார் இடங்களான வீடுகள், வீடுகளின் சுவர்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்களை அரசியல் கட்சியினர் முன்வந்து அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் அகற்றி விட்டு செலவு கணக்கை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தலைவர்களின் சிலைகள்
அரசியல் கட்சி தலைவர்களின் சிலையை மூடி வைக்க வேண்டும். வேட்பாளர்கள் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்களின் நாள், நேரம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே காவல்துறைக்கு தெரிவித்து உரிய அனுமதி பெற வேண்டும். தேர்தல் ஆணையத்தால் அனுமதி பெறாதவர்கள் வாக்குச்சாவடிகளுக்குள் செல்ல அனுமதியில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது, திருப்பூர் மாவட்ட தேர்தல் தனி தாசில்தார் முருகதாஸ், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.