திண்டுக்கல் அருகே வாகன சோதனையில் சிக்கிய வழிப்பறி கொள்ளையன்
திண்டுக்கல் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் வழிப்பறி கொள்ளையன் சிக்கினான்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியபட்டியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர் மதுரையை சேர்ந்த சீமராஜா (வயது 37) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சத்திரப்பட்டி அருகே இருந்து காரை திருடி வந்தது தெரியவந்தது. மேலும் இவர் மீது மதுரை போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து மதுரை சத்திரப்பட்டி போலீசாருக்கு, திண்டுக்கல் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திண்டுக்கல் வந்த அவர்களிடம், சீமராஜா ஒப்படைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீமராஜாவை சத்திரப்பட்டி போலீசார் அழைத்து சென்றனர்.