மாசித்திருவிழா கொடியேற்றம்

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

Update: 2021-03-01 18:58 GMT
புதுக்கோட்டை, மார்ச்.2-
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
மாசித்திருவிழா
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்ட பின் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் தொடர்ந்து தினமும் இரவு 8 மணி அளவில் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வந்தார்.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. விழா வருகிற 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் கோவிலில் இருந்து அம்பாள் காலையிலும், மாலையிலும் திருவப்பூர் காட்டுமாரியம்மன் கோவிலுக்கு எழுந்தருளி புஷ்பமின் அலங்காரத்துடன் பலவிதமான கலைநிகழ்ச்சியுடன் உலா வந்து கோவில் வந்து சேருவார்.
வருகிற 16-ந் தேதி அதிகாலை அம்பாள் கோவிலுக்கு வந்து சேர்ந்ததும் விழா நிறைவு செய்யும் வகையில் அம்பாளுக்கு காப்பு களைந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்