பல்லடத்தில் பெயிண்டரை இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்ற தொழிலாளி கைது

பல்லடத்தில் பெயிண்டரை இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்ற தொழிலாளி கைது

Update: 2021-03-01 18:15 GMT
பல்லடம், 
 பல்லடத்தில் தனியார் நூற்பாலையில் பெயிண்டரை இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குடிபோதையில் தகராறு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர் மங்கலேஸ்வரன் (வயது 43). இவர் பல்லடம் அருகே உள்ள சின்னூரில் உள்ள ஒரு நூற்பாலையில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருடன் சிவகாசியை சேர்ந்த அய்யனாரும் (41)வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 27-ந்தேதி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது. சம்பளத்தை வாங்கிய மங்கலேஸ்வரன், அய்யனார் மற்றும் தொழிலாளர்கள் சிலர் பல்லடம் பஸ் நிலையம் எதிரே உள்ள, டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தனர். அப்போது மங்கலேஸ்வரனுக்கும், அய்யனாருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. 
அடித்துக்கொலை
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி, மீண்டும் நூற்பாலைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு இவர்கள் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது அய்யனார் குடும்பத்தை மங்கலேஸ்வரன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அய்யனார் அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து, மங்கலேஸ்வரன் தலை, உள்ளிட்ட இடங்களில் கடுமையாக தாக்கியுள்ளார். 
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அய்யனார் அங்கிருந்து தலைமறைவானார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை அங்குள்ள அறை முன்பு ரத்தவெள்ளத்தில் மங்கலேஸ்வரன் பிணமாக கிடப்பதை மற்ற தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தனிப்படை போலீஸ்
இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் மங்கலேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். 
இந்த நிலையில் பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சின்னுரை அடுத்த காட்டு பகுதியில் அய்யனார் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சிவகாசியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அய்யனார்(41) என்பதும் தெரியவந்தது. 
கைது 
பெயிண்டர் வேலைக்காக இங்கு வந்ததும், கடந்த சனிக்கிழமை குடிபோதையில் மங்கலேஸ்வரனுக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டு, அதில் குடும்பத்தை, தகாத வார்த்தைகளால் மங்கலேஸ்வரன் திட்டியதால், ஆத்திரமடைந்து இரும்புக் கம்பியால் தாக்கியதாகவும், இதில் அவர் மயங்கி கீழே விழுந்தவுடன், பயந்துபோய் அங்கிருந்து ஓடி விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அய்யனாரை கைது செய்த போலீசார் பல்லடம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்