மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் 36 கடைகளை திறக்க அனுமதி

மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் 36 கடைகளை திறக்க அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-03-01 17:18 GMT
மதுரை, மார்ச்.2-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடைக்காரர்கள் சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் வளாகத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு இந்த கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்தன. இதற்கு பிறகு 8 மாதங்கள் கழித்து சில கடைகளை மட்டும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அதன்பின்பு கொரோனா ஊரடங்கின் காரணமாக மீண்டும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதித்த போதும், மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கடைகளை திறக்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை. 
தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் உள்ள கடைகள் திறக்கப்பட்டு விட்டன. எனவே எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீனாட்சி கோவிலில் உள்ள கடைகளை திறக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோவில் வளாகத்தில் பூக்கடைகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. அங்கு நடந்த தீ விபத்தில் 40 கடைகள் எரிந்துவிட்டன. தற்போது 72 கடைகள் மட்டும் உள்ளன. இதில் பல்வேறு ஆய்வுகள் நடத்தி 36 கடைகளை மட்டும் திறக்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப் பட்டு இருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 36 கடைகளையும் ஒரு வாரத்தில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

மேலும் செய்திகள்