தேனி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக 80 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

தேனி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வகுப்புக்காக சட்டமன்ற தொகுதி வாரியாக 80 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2021-03-01 17:00 GMT
தேனி:

தேர்தல் பயிற்சி வகுப்பு
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தேர்தலுக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 

இந்த பயிற்சி வகுப்பின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவற்றை கையாள்வது குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அதுபோல், தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கும் பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மாதிரி வாக்குச்சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. 

இந்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பயன்பாட்டுக்காக சட்டமன்ற தொகுதிக்கு தலா 20 எந்திரங்கள் வீதம் 80 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

பாதுகாப்பு
இதற்காக தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான பாதுகாப்பு கிட்டங்கி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது. 

பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் பார்வையிட்டார். சட்டமன்ற தொகுதி வாரியாக பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காக அனுப்ப தயார் செய்யப்பட்டு இருந்த எந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டன.

பின்னர், கலெக்டர் முன்னிலையில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 20 வாக்குப்பதிவு எந்திரங்கள், 20 கட்டுப்பாட்டு கருவிகள், 20 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

 அவை, அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும் செய்திகள்