விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-03-01 15:02 GMT
விருத்தாசலம் :

விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. மேலும் 2 மினிகுடிநீர் தொட்டிகளும் செயல்படவில்லை. புதிதாக அமைக்கப்பட்டு வந்த ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியும் பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கப்படவில்லை. குடிநீரு்க்காக பொதுமக்கள் அருகில் உள்ள வார்டு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

 இதனால் அவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் தெரிவித்தும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை  விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் எதிரில் காலி குடங்களுடன் திடீரென் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து பாதிப்பு

அப்போது அவர்கள் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்