72 மணி நேரத்தில் சுவரொட்டி, விளம்பரங்களை அப்புறப்படுத்த வேண்டும்-தேர்தல் ஆணையம் கெடு

சுவரொட்டி, சுவர் விளம்பரங்களை 72 மணி நேரத்தில் அப்புறப்படுத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கெடு விதித்து உள்ளது.

Update: 2021-02-28 20:44 GMT
திருச்சி, 

சுவரொட்டி, சுவர் விளம்பரங்களை 72 மணி நேரத்தில் அப்புறப்படுத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கெடு விதித்து உள்ளது.

தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கடந்த மாதம் 26-ந்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டது. இதன்படி மாநிலம் ழுழுவதும் அரசு மற்றும் தனியார் சுவர்களில் உள்ள கட்சி விளம்பரங்கள், சுவரொட்டிகள் அப்புறப்படுத்த வேண்டும்.

பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகள் அகற்றப்பட வேண்டும். தலைவர்களின் சிலைகள் மறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அழிக்கப்படாத விளம்பரங்கள்

திருச்சி மாநகரை பொறுத்தவரை முக்கியமான சாலைகள் மற்றும் முக்கிய பாலத்துடன் கூடிய கைப்பிடி சுவர்களில் கட்சி விளம்பரங்கள் நேற்று மாலை வரை அழிக்கவில்லை. இதே போல் பல வண்ணங்களில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டிகளும் கிழித்து அப்புறப்படுத்தவில்லை. 

சாலை ஓர கொடிக்கம்பங்கள் ஒரு சில இடங்களில் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. பெரும்பாலான இடங்களில் அவை அப்புறப்படுத்தவில்லை. இதே போல் ஒரு சில தலைவர்களின் சிலைகள் தான் துணியால் மூடப்பட்டு உள்ளன.

72 மணி நேர கெடு

திருச்சி நகரில் உள்ள பெரும்பாலான பஸ் நிறுத்த நிழற்குடைகளில் வைக்கப்பட்டிருந்த அரசு நலதிட்ட உதவி வழங்குவது போன்ற புகைப்படங்கள், விளம்பர பதாகைகள் ஆகியவற்றை காகிதத்தால் மூடி அவற்றை மறைக்கும் பணிகள் பல இடங்களில் நடந்தது.

இதற்கிடையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள ஒரு சுற்றறிக்கையில், தனியார் சுவர்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்களை 72 மணி நேரத்திற்குள்ளும், அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள விளம்பரங்களை 48 மணி நேரத்திற்குள்ளும் அழிக்கவேண்டும் என கூறப்பட்டு உள்ளது. 

தேர்தல் ஆணையம் விதித்து உள்ள இந்த கெடு முடிவதற்குள் சுவர் விளம்பரங்களை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்