தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நெல்லைக்கு துணை ராணுவ படையினர் வருகை

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நெல்லைக்கு துணை ராணுவ படையினர் வந்தனர்.

Update: 2021-02-28 20:06 GMT
நெல்லை, மார்ச்
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நெல்லைக்கு துணை ராணுவ படையினர் வந்தனர்.

தேர்தல் பாதுகாப்பு பணி

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, மத்திய துணை பாதுகாப்பு படையினர் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி சிறப்பு ரெயிலில் துணை ராணுவ படை வீரர்கள் 803 பேர் நேற்று மதுரைக்கு வந்தனர்.

பதற்றமான பகுதிகளில்...

பின்னர் அங்கிருந்து துணை ராணுவ படையினர் 406 பேர் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். நெல்லை வந்த அவர்கள் அனைவரும் பின்னர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன்படி நெல்லையில் தேர்தல் பாதுகாப்பு பணி மேற்கொள்வதற்காக 84 துணை ராணுவ வீரர்கள், நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறுகையில், ‘தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். 
பதற்றமான பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்’ என்றார்.

மேலும் செய்திகள்