திருமானூர் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலி உடலை துண்டு, துண்டுகளாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி வீசிய கொடூரம் 3 பேர் கைது

திருமானூர் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலி உடலை துண்டு, துண்டுகளாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி வீசிய கொடூரம் 3 பேர் கைது

Update: 2021-02-28 18:18 GMT
கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள சேனாபதி கிராமத்தை சேர்ந்தவர் சவேரியார்(வயது 34). விவசாயி. இவரது மனைவி ஜெசிந்தாமேரி. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சவேரியார் அதே பகுதியில் குத்தகைக்கு எடுத்த 3 ஏக்கர் வயலில் நெல்சாகுபடி செய்திருந்தார். அந்த வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச கடந்த மாதம் 18-ந் தேதி இரவு 10 மணிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து திருமானூர் போலீசாரிடம் ஜெசிந்தாமேரி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
இந்நிலையில் சவேரியார் வயலுக்கு பக்கத்து வயலை சேர்ந்த முருகேசன்(60) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில், பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், முருகேசனுக்கு சேனாபதி மற்றும் காரைப்பாக்கம் கிராமங்களில் பல ஏக்கர் நிலம் உள்ளது. இதில் நெல் மற்றும் கரும்பு பயிர் சாகுபடி செய்வது வழக்கம். இந்நிலங்களில் பன்றிகள் அடிக்கடி புகுந்து விவசாயத்தை நாசம் செய்வதால் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக தனது பம்புசெட்டில் இருந்து மின்சாரத்தை இணைத்து பன்றிகளை கொல்வது வழக்கமாக நடைபெற்று வந்துள்ளது. அதுபோல பன்றியை வேட்டையாட வைத்த மின்சார வேலியில் தவறுதலாக இரவில் தண்ணீர் பாய்ச்ச வந்த சவேரியார் மின்சாரம் தாக்கி இறந்தார். 
காலையில் வயலுக்கு வந்த முருகேசன் இறந்துகிடந்த சவேரியாரின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் வெளியில் தெரிந்தால் போலீசார் கொலைவழக்கில் கைதுசெய்வார்கள் என்று அச்சப்பட்டு சவேரியார் உடலை பலதுண்டுகளாக வெட்டி, அவரது வயலில் வேலை பார்க்கும் கூலியாட்களான கணேசன்(60) மற்றும் சாமிதுரை(45) ஆகியோரின் உதவியுடன் தனது கரும்பு வயலிலேயே சாக்கு மூட்டையில் கட்டி வீசி உள்ளார். 
3 நாட்களுக்குப்பிறகு துர்நாற்றம் வீசத்தொடங்கியதால் அந்த சாக்கு மூட்டையில் உள்ள சவேரியாரின் உடலை கொள்ளிடம் ஆற்றில் போட்டு விடலாம் என எண்ணி அதனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் காரப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு கரும்பு வயலுக்குள் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். சிலநாட்களாக இதை வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முருகேசன், கணேசன், சாமிதுரை ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்