முத்தூர் அருகே கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நிறுத்தக்கோரி விவசாயிகள் அஞ்சல் அட்டை

முத்தூர் அருகே கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நிறுத்தக்கோரி விவசாயிகள் அஞ்சல் அட்டை

Update: 2021-02-28 16:03 GMT
முத்தூர்:-
முத்தூர் அருகே கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நிறுத்தக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு விவசாயிகள் அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்தனர். 
கீழ்பவானி வாய்க்கால்
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர் கொள்ளளவு 105 அடி ஆகும். இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மாவட்டம், கேரளா மாநில வனப்பகுதிகள் உள்ளன. இந்த அணையில் இருந்து கீழ்ப்பவானி பாசன பகுதிகளுக்கு கால்வாய்கள் மூலம் ஆண்டு தோறும் இரு பிரிவுகளாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 
இந்த தண்ணீரை பயன்படுத்தி 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடியும், எண்ணெய் வித்து பயிர் சாகுபடியும் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி ஒரு மதகில் தண்ணீர் திறக்கப்படும் கால கட்டத்தில் மண்ணால் ஆன கால்வாய்களில் தண்ணீர் செல்லும் போது  1 லட்சம் ஏக்கருக்கு மேல் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மூலம் மறைமுக பாசனம் பெற்று வருகிறது. 
கான்கிரீட் தளம் 
இந்த நிலையில் கீழ்பவானி பாசன கால்வாயில் நவீனபடுத்துதல் என்ற திட்டத்தின் கீழ் ரூ.740 கோடி மதிப்பில் தமிழக அரசு பொதுப்பணித்துறையின் மூலம் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  உடனடியாக கீழ்ப்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை நிறுத்தி வைக்க பொதுப்பணித்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட க்கோரி முத்தூர் அருகே உள்ள செட்டியார்பாளையம், வாய்க்கால்பாலம் பஸ் நிறுத்தம் அருகில் தமிழக கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கம், பாசன பயனாளிகள் மற்றும் விவசாயிகள் கூட்டியக்கத்தின் சார்பில் கவனஈர்ப்பு கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாலைவனமாக மாறும்
இந்த கூட்டத்திற்கு தமிழக கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் செ.நல்லசாமி தலைமை தாங்கி பேசியதாவது:- 
பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய் முடியும் கரூர் மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி பகுதி வரை அதாவது 124 மைல் தூரத்திற்கு தமிழக அரசு கால்வாய் நவீனப்படுத்துதல் என்ற திட்டத்தின் மூலம் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.   கான்கிரீட் தளம் அமைப்பதற்கு முன்பு இருபுறமும் உள்ள பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டால் அங்கு வசிக்கும் பல்வேறு பறவை இனங்கள் அழிந்து விடும். மேலும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டு மழை பொழிவும், வளமும் குறையும்.மேலும் கீழ்பவானி பாசன பகுதி பாலைவனமாக மாறி பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு விவசாய பணிகளும் முற்றிலும் தடைபடும். 
இவ்வாறு அவர் பேசினார். 
அஞ்சல் அட்டை 
முடிவில் கீழ்பவானி பாசன விவசாயிகள் தேர்தல் ஆணையத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கும் திட்ட பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க கோரி அஞ்சல் அட்டை மூலம் கையெழுத்திட்டு  தேர்தல் ஆணையத்திற்குஅனுப்பி வைத்தனர். இந்த கூட்டத்தில் கீழ்பவானி பாசன சங்க உறுப்பினர்கள் பழனிச்சாமி, செல்லமுத்து, கோபிநாத், பொன்னுச்சாமி, சுப்பிரமணி, சின்னச்சாமி மற்றும் கீழ்பவானி பாசன விவசாயிகள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொணடனர். முடிவில் ஊராட்சி உறுப்பினர் எம்.சிவக்குமார் நன்றி கூறினார். முன்னதான விவசாயிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்