குடியாத்தம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய்-மகள் ரெயிலில் அடிபட்டு பலியாகினர்.
விரிஞ்சிபுரம்-கே.வி.குப்பம் இடைேய தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தாய்-மகள் ரெயிலில் அடிபட்டு பலியாகினர்.
ஜோலார்பேட்டை
பாதுகாப்புப்படை காவலரின் மனைவி
குடியாத்தத்தை அடுத்த கே.வி. குப்பம் கீழ்விலாச்சூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், சென்னை பூந்தமல்லியில் மத்திய பாதுகாப்புப்படை காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி ஜெயந்தி (வயது 29) என்ற மனைவியும், நந்திதா (4) என்ற மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். அவர், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி 3 நாட்களுக்கு முன்பு புதுமனை புகுவிழா நடத்தினார். அதன் பிறகு அவர்கள் புதிய வீட்டில் குடியேறி வசித்து வந்தனர்.
ஜெயந்தி, தனது மகள் நந்திதாவுடன் விரிஞ்சிபுரம்-கே.வி.குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடந்து வந்து ஓரிடத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டையை நோக்கி சென்ற சரக்கு ெரயிலில் அடிபட்டு உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரணம் என்ன?
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சபரிநாத், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களுக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஜெயந்தியும், நந்திதாவும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனப் பல்வேறு கோணத்தில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.