தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: கட்சி கொடி கம்பங்கள், சுவர் விளம்பரங்கள் அகற்றும் பணி தீவிரம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி, பல்வேறு கட்சியினரின் கொடி கம்பங்கள், சுவர் விளம்பரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
திருவள்ளூர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதியன்று நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12-ந் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததை தொடர்ந்து, நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் உள்ள கட்சி தலைவர்கள் படங்களை அகற்றும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அகற்றும் பணியில் அதிகாரிகள்
அதேபோல திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே வைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சியினரின் கட்சி கொடி கம்பங்கள் போன்றவற்றையும் அரசு அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா. பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
அதேபோன்று திருவள்ளூர் நகரின் முக்கிய சாலைகளில் உள்ள கட்சி சார்ந்த சுவரொட்டிகளையும், சுவர் விளம்பரங்களையும் அழிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருவள்ளூர் ஆயில் மில், மணவாளநகர் போன்ற பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அகற்றும் பணியையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட சமூகபாதுகாப்பு திட்ட துணை ஆட்சியரான பாலகுரு நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி உள்பட தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி சுவரொட்டிகளையும், பல்வேறு இடங்களில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களையும் கும்மிடிப்பூண்டி தாசில்தாரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான மகேஷ் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள்மற்றும் தாலுகா அலுவலக உதவியாளர்களும் அழிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.