ஆலங்குளம் அருகே குடும்ப தகராறில் பரிதாபம்: டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து மேள கலைஞர் தற்கொலை

ஆலங்குளம் அருகே குடும்ப தகராறில் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து மேள கலைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-28 00:11 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே குடும்ப தகராறில் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து மேள கலைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

மேள கலைஞர் 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வெட்டுவான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முப்புடாதி மகன் அழகுடையார் (வயது 27). மேள கலைஞர். இவருடைய மனைவி சக்தி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 

அழகுடையாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை மனைவி கண்டித்ததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.  

தகராறு 

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் தகராறு ஏற்படவே சக்தி கோபித்துக் கொண்டு ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். 

அவரை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக அழகுடையார் நேற்று காசிநாதபுரத்துக்கு சென்றார். அவர் சக்தியை தன்னுடன் வருமாறு அழைத்தார். அதற்கு சக்தி மறுத்து விட்டார்.

தற்கொலை 

இதனால் மனவேதனை அடைந்த அழகுடையார் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினார். திடீரென அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்தார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சோகம்

குடும்ப தகராறில் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து மேள கலைஞர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்