சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா 7-ந்தேதி தொடங்குகிறது

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா 7-ந்தேதி தொடங்குகிறது

Update: 2021-02-27 22:10 GMT
சமயபுரம், 

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது.

சமயபுரம் மாரியம்மன் கோவில்

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஸ்ரீரங்கம் கோவிலின் மூலவரை போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பு அம்சமாகும்.

அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும்.

ஆதி பீடம்

மேலும் இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு இக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்றும் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறார் என்பதற்கும் சிற்பச்சான்றுகள் உள்ளன.

இக்கோவிலில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரம் ஆகும். எனவே தான் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருவுருவமாக காட்சி அளிக்கிறார்.

பச்சை பட்டினி விரதம்

மும்மூர்த்திகளை நோக்கி, அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இக்கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். 
அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

பூச்சொரிதல் விழா

இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலின் பூச்சொரிதல் விழா வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொடங்குகிறது. அன்று அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மீனலக்கனத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா தொடங்குகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்